Sunday, February 14, 2016

புஸ்வாணமான அதிர்வேட்டு!

தேர்தல் 2016
புஸ்வாணமான அதிர்வேட்டு!

மதுரையில் வசித்தவர்களுக்குத் தெரியும். அம்மனும் சுவாமியும், அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் நகர்வலம் வரும் முன், ஓரடி உயரமுள்ள கள்ளிப் பலகைகளால் செய்த டயர் வண்டி ஒன்று வரும். அதிலிருந்து எதையோ எடுத்துப் பற்ற வைப்பார்கள். வெடி ஒன்று உரத்து வெடித்து ஊரையே அதிர வைக்கும். அந்த அதிர் வேட்டுக்குப் பின்னர்தான் மேளம், யானை, கொடி, குடை. எல்லாம். அநேகமாகத் தமிழகத்தின் கோயில் நகரங்களில் எல்லாம் இதுதான் வழக்கம்

தமிழகத்தில் தேர்தல் ஊர்வலம் தெருவிற்கு வரும் முன், அதிர் வேட்டுப் போடும் வேலை பத்திரிகைகளுக்கு. அவை பற்றவைப்பதில் சில புஸ்வாணமாகப் புகைந்து அவிந்துவிடுவதும் உண்டு. சில வண்ணக் கோலங்களை வானில் இறைத்துவிட்டு சாம்பலாய் உதிர்ந்து சரிந்து விடுவதுமுண்டு. ஊசிப்பட்டாசாய் ஒரு சில வெடிக்கும் என்றாலும் அதிர்வேட்டுகள்தான் அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்யும்

அப்படித் திரும்பிப் பார்க்கச் செய்த  அதிர்வேட்டு ஒன்று நேற்று புஸ்வாணமாகப் புகைந்து விட்டது . அது திமுக-பாஜக கூட்டணி ஒன்று உருவாகும் என்று ஊடகங்கள் பரப்பிய என்ற ஊகம். அன்பர் தினத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே காங்கிரஸ் –திமுக கூட்டணி பற்றிய அறிவிப்பு வந்து விட்டது

தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசையின் மகன் திருமணம் வரும் 17ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கிறது. கட்சியின் தலைவர் அமித்ஷா அதில் கலந்து கொள்கிறார். “ இதையொட்டி திமுக தலைமையுடன் அமித்ஷா பேசுவதற்கான ஏற்பாடுகளை திமுக-பாஜக தலைவர்கள் செய்து வருகின்றனர்” என்று தினமணி செய்தி வெளியிட்டிருந்தது .

அப்போது அறிவிப்பு வெளியாகாவிட்டாலும் பாஜகவுடன்  கூட்டணி குறித்த பேச்சு  வார்த்தைகள் உறுதிப்படும் என்ற ஊகங்கள் உலவின . உறுதிப்படும்? அப்படியானால் இந்தக் கூட்டணி குறித்து முன்பே வெள்ளோட்டம் பார்க்கப்பட்டிருக்கிறதா?

கடந்த மூன்றுமாதங்களாகவே ஸ்டாலின் தலைமையில் பாரதிய ஜனதாவும் திமுகவும் கூட்டணிப்பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. அதற்கு கவிஞர்தான் தூதர். தமிழிசையும் குருமூர்த்தியும் எதிர்ப்பு, இல.கணேசன் ஆதரவு. இந்தப்பக்கம் கனிமொழியின் நிபந்தனைகள். இதையெல்லாம் கேரளத்தின் அத்தனை இதழாளர்களும் தண்ணியடித்தால் விரிவாகப் பேசிக்கொண்டிருந்தனர்.”  என்று மலையாள உலகை நன்கறிந்த ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார்.

இருவாரங்களுக்கு முன் எர்ணாகுளத்திற்கு வந்த அமித்ஷாவை தமிழக பாஜக தலைவர்கள் சந்தித்தனர். “தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவை எடுக்கும் உரிமையை என்னிடமே விட்டுவிடுங்கள்” என்று அவர்களிடம் தெரிவித்திருந்தார் அமித்ஷா.

அதற்குச் சில நாள்கள் முன்பாக சுப்ரமணிய சுவாமி, கருணாநிதி விலகிக் கொண்டு ஸ்டாலினை முதல்வராக அறிவித்தால், திமுக-பாஜக-தேமுதிக கூட்டணி ஏற்பட வாய்ப்புண்டு என்பதைப் போன்று தனது ட்விட்டரில் ட்வீட் செய்திருந்தார். எதிர்பார்த்தபடியே இது சலசலப்புகளை ஏற்படுத்தியது. ஸ்டாலினின் விருப்பப்படிதான் இந்த யோசனை வைக்கப்படுகிறது என்று சிலரும், விஜயகாந்தின் மனநிலையை ஆழம் பார்க்கக் கருணாநிதியின் ஆலோசனையின் பேரில்தான் இது கூறப்பட்டுள்ளது என்றும், கட்சிக்குள்ளும் குடும்பத்திலும் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு ஏதும் எழாமல் இருக்க, ஒரு சாக்காகப் பயனபடுத்திக் கொள்ளும் நோக்கில் இது பேசப்படுகிறது என்றும் ஊடக வட்டாரங்களில் ஊகங்கள் மிதந்தன.

நேற்று (பதிவிட்ட நாள் 11.2.16) இதழாளர் ஒருவரிடம் பேசினேன். [சினிமா விவாதத்தில்தான்] இந்தத்தேர்தலில் 2 சதவீதம்தான் வாக்கு மாறுபாடு இருக்கும். அதன்பொருட்டே மூன்றாம் அணி என்று சொன்னார். ஆனால் திமுகவுக்கு அது ஒரு பிரச்சினையே அல்ல.அவர்களின் பிரச்சினை பணப்பட்டுவாடாவும் கள்ளவாக்கும்தான். காபந்து அரசாக அதிமுக இருந்தால் ஒன்றும் செய்யமுடியாது. ஆகவே மத்திய அரசின் ஆதரவு தேவை, மத்திய அரசு உண்மையாகவே கடிவாளம் பற்றவும் வேண்டும், இல்லையேல் வெற்றிவாய்ப்பே இல்லை என்றார்என்று ஜெயமோகன் வேறு ஒரு காரணம் சொல்கிறார்.

சுவாமியின் கருத்தை நிராகரிப்பது போல் தமிழக பாஜகவில் எதிர்வினைகள் இல்லை. அது அவருடைய சொந்தக் கருத்தாக இருக்கலாம். ஆனால் கட்சித் தலைமைதான் உரிய முடிவெடுக்கும் என்பதுதான் அவர்கள் அதிகாரபூர்வமாக வெளியிடும் பதில். ஆனால் சுவாமி எல்லோரையும் கலந்து கொண்டுதான் அந்தக் கருத்தை வெளியிட்டார் என அவருக்கு நெருக்கமான ஆசிர்வாதம் ஆச்சாரி சொல்கிறார். இல.கணேசன் இன்னும் ஒருபடி மேலே போய், “ இதில் எங்களுக்கு என்ன பிரச்சினை? விடுதலை ஆசிரியர் வீரமணி போன்றவர்களுக்குத்தான் பிரச்சினை” என்று ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்தார்

ஆனால் பாஜகவோடு உறவு இல்லை என்று ஸ்டாலின் மறுத்தார். வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கடந்த புதனன்று (10/2/16) சென்னை வந்திருந்தார். அவர் பாஜகவிற்கு நெருக்கமான ஆன்மீகத் தலைவர் எனக் கருதப்படுபவர். பாஜக அரசால் இந்தாண்டு பத்மவிபூஷன் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் தனது சென்னைப் பயணத்தின் போது ஸ்டாலினை அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்தார். அவர் பாஜக தலைமையிடமிருந்து ஏதேனும் செய்தி கொண்டு வந்திருக்கக் கூடும் என்ற ஊகங்கள் கசிந்தன. ஆனால் “"தமிழக சட்டப்பேரவை தேர்தலை திமுகவும் பாஜகவும் ஓரணியில் சேர்ந்து சந்திக்க எவ்வித வாய்ப்பும் இல்லை. பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்கலாம் என வெளியாகியிருக்கும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை.
ஆனால், யாரெல்லாம் எங்களை அரசியலில் தீண்டத்தகாதவர்கள் போல் பாவித்தார்களோ அவர்களெல்லாம் எங்களை நோக்கி படையெடுப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. எங்களுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதில் விருப்பம் இருப்பதாக பாஜகவிடம் இருந்து எவ்வித அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வரவில்லை. எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார் ஸ்டாலின்.

ஒருவேளை அமித்ஷா கருணாநிதி சந்திப்பு வரும் 17ஆம் தேதி நடக்குமானால் அதற்கு முன் கருணாநிதியைச் சந்தித்து விட வேண்டும் என்று காங்கிரஸ் கருதியது . இதற்காக  13ஆம் தேதியன்று குலாம் நபி ஆசாத் சென்னை வந்து  கருணாநிதியை சந்தித்தார். அவரை வாசலில் நின்று வரவேற்றவர், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியினால் வழக்குப் போடப்பட்டு சிறை சென்று மீண்ட கனிமொழி!

திமுக –காங்கிரஸ் கூட்டணி அமைந்திருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. ஆனால் ஒன்று தெளிவாகப் புலனாகிறது. தமிழகத்தில் தேசியக் கட்சிகள்  மாநிலக் கட்சிகளைச் சார்ந்து இருக்கிறது என்பது மறுபடியும் இந்தத் தேர்தலில் நிரூபணமாகிறது.


தமிழ் முரசு (சிங்கப்பூர்) 14.2.2016

No comments: