Saturday, June 27, 2009

ஜெர்மனியில் தமிழ் இணைய மாநாடு 2009

தமிழ் தகவல் தொழில்நுட்பம் குறித்த இன்றைய சாதனைகளையும், எதிர்கால சவால்களையும் அறிஞர்கள், வல்லுநர்கள் கூடி விவாதிக்கும் தமிழ் இணைய மாநாடு வரும் அக்டோபர் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஜெர்மனியில் நடைபெற உள்ளது. தமிழ் தகவல் தொழில்நுட்பத்திற்கான அனைத்துலக மன்றமான உத்தமம் (International Forum for Information Technology in Tamil- INFITT) அமைப்பும், ஜெர்மனியில் அமைந்துள்ள கோலென் பல்கலைக்கழகத்தின் இந்தியயியல் மற்றும் தமிழ் ஆய்வு மையமும் (Insitute of Indology and Tamil Studies, University of Cologne) இணைந்து இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளன.

தமிழ் தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுவரும் வளர்ச்சிகளையும், சவால்களையும் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் தீர்வுகளை நோக்கி முன்னேறவும் அவ்வப்போது சர்வதேச அளவில் தமிழ் இணைய மாநாடுகளுக்கு உத்தமம் அமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது. தமிழ் தகவல் தொழில்நுட்பம் குறித்து தொடர்ந்து சர்வதேச அளவில் மாநாடுகளை உத்தமம் அமைப்பு மட்டுமே நடத்தி வந்துள்ளது.



இதுவரை சென்னை (1999, 2003 ) சிங்கப்பூர் (2000, 2004) மலேசியா (2001) அமெரிக்கா (2002) ஆகிய நாடுகளில் தமிழ் இணைய மாநாடுகள் நடந்துள்ளன.


இந்த ஆண்டு முதல் முறையாக ஐரோப்பாவில் தமிழ் இணைய மாநாடு நடைபெற உள்ளது. ஜெர்மனியில் உள்ள கோலென் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறன்றன. "கணினி வயிக் காண்போம் தமிழ்” என்பது இந்த மாநாட்டின் மையக் கருத்தாக இருக்கும் உலகெங்கிலுமிருந்து தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் பங்கேற்றவுள்ளார்கள். ஆழ்ந்த விவாதங்களுக்குப் போதுமான நேரம் கிடைக்க ஏதுவாக 100 பேராளர்கள் மட்டுமே மாநாட்டில் பங்கேற்க வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாடு குறித்து சுவிட்சர்லாந்தில் வசிக்கும் உத்தமம் அமைப்பின் தலைவர் பேராசிரியர் முனைவர் கு.கல்யாணசுந்தரம், "தமிழ் இணைய மாநாடு இதுவரை தமிழர் அதிக அளவில் வாழும இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா இவற்றில் நடைபெற்றன. இந்த ஆண்டு நான்கு லட்சத்திற்குமேல் தமிழர்கள் வசிக்கும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஜெர்மனியில் நடக்கவுள்ளது. இங்கு உள்ள இளம் தமிழர்கள் கணினியை பெருமளவில் ஐரோப்பிய மொழிகளில் பயன்படுத்துகின்றனர். இந்த ஆண்டு இணைய மாநாட்டின் நோக்கின்படி (கணினி வழி காண்போம் தமிழ்) இவர்கள் அனைவரும் தமிழில் கணினியை பயன்படுத்தவும் இணையம் வழி கல்வி கற்க வகை செய்வதே." என்று தெரிவித்தார்.

மாநாட்டில் அளிப்பதற்குரிய கட்டுரைகளை இந்த ஆண்டு ஆகஸ்ட் 15க்குள் கட்டுரைகளின் சுருக்கத்தை ti2009@infitt.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். பென்சில்வேனியா பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் வாசு ரங்கநாதன் தலைமையில் அமைந்துள்ள வல்லுநர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் மாநாட்டில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
கீழ்க்கண்ட பொருள்களில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன :
1. Open source software and Localization
2. Tamil enabling in mobile phones
3. Machine Translation, OCR & Voice recognition
4. Tools for Tamil Computing
5. Tamil Internet & Social Networking
6. E-Learning
7. Databases for Digital libraries
8. Digital archiving of Tamil heritage materials
9. Standards for Tamil Computing
மாநாட்டுக்கான இணையதள முகவரி :
http://www.infitt.org/ti2009/

Saturday, June 06, 2009

பத்திரிகைப் பணி அழைக்கிறது

உள்ளே இருக்கா ஓர் ஒளி ?

  • வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும், எழுத வேண்டும் என்ன நினைப்பவரா?

  • 'நல்லாவே எழுதுகிறேன்' என்பதுதான் உங்களைப் பற்றிய உங்கள் கணிப்பா?

  • இளைய தலைமுறையின் முழு ஆற்றலும் இன்னும் வெளிக் கொண்டுவரப்படவில்லை, அதை வெளிக் கொண்டுவர என்னால் ஆனதைச் செய்ய வேண்டும் என்ற தவிப்பு உங்களிடம் இருக்கிறதா?

  • சமூகப் பொறுப்புடன் புதிய முயற்சிகளை செய்து பார்க்கும் ஒரு குழுவுடன் இணைந்து செயல்பட ஆர்வமுண்டா?

தமிழில் புதிதாகத் துவங்கப்பட உள்ள ஒரு வார இதழில் சென்னையில் இருந்து முழுநேரப் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம் உங்களைப் பற்றிய விவரங்களையும் உங்கள் படைப்புகளில் மிகச் சிறந்தது என நீங்கள் கருதும் ஒன்றையும் எனக்கு மின் அஞ்சல் ( maalan@gmail.com ) செய்யுங்கள்.

இதழியலில் ஆர்வம் உண்டு . ஆனால் அதை என்னால் முழு நேரப் பணியாக எடுத்துக் கொள்ள முடியாது. அதற்காக சென்னைக்குப் பெயர்ந்து வர முடியாது. என் குடும்பச்/பணிச் சூழல் அப்படி. இருந்த இடத்திலிருந்தே ஏதாவது செய்ய முடியும் என்றால் சொல்லுங்கள் என்ற நிலையில் இருப்பவர்களும் தொடர்பு கொள்ளலாம். ஆனால் என்ன செய்ய முடியும் என்பதைத் தெளிவாகத் தெரிவியுங்கள்.

இளைஞர்களுக்கு முன்னுரிமை.

Monday, June 01, 2009

நன்றி.

வாய்ப்புக் கிட்டாதவ்ர்களும் பதிலளிக்கலாம்

இப்போதெல்லாம் புத்தகங்களின் விற்பனை அதிகரித்திருப்பதை பதிப்பாளர்களின் புன்னகை curveல் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. மிகவும் பிரபலமாகாத தொலைக்காட்சிகளில் Non -prime time நிகழ்ச்சிகளைப் பற்றிக்கூட எங்காவது யாராவது வியக்கிறார்கள் / திட்டுகிறார்கள். வலைப்பூக்களின் வளர்ச்சியை அதன் ஆரம்ப நாட்களிலிருந்து பார்த்து வருபவன் என்ற முறையில் பிரமிப்பாக இருக்கிறது. சாலையில் நடந்து போனால் எதிரே வருகிற பத்துப் பேரில் நான்கு பேராவது செல்போனில் கதைத்துக் கொண்டோ கடலை போட்டுக் கொண்டோ போகிறார்கள். ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தால், ஹலோ, பிக, ஆகா, சூரியன், மிர்சி, ரெயின்போ, ரேடியோ சிட்டி என ஓட்டுநர் ஒரு காக்டெயில் வழங்குகிறார். இத்தனைக்கும் நடுவில் பிரபுல் படேல், தயாநிதி மாறன் அளவிற்கு இல்லையென்றாலும் அநேகமாகப் பலர் வாழ்க்கையை சிரமமின்றி ஓட்டுவதற்குத் தேவையான அளவு பொருளீட்டிக் கொண்டிருப்பது போல்தான் தெரிகிறது.

இந்த அமளிகளுக்கு நடுவில் மக்கள் பத்திரிகைகளைப் படிக்கிறார்களா ? படிப்பதில் திருப்தி அடைகிறார்களா? இன்று வாசிக்கும் பழக்கம் எப்படி இருக்கிறது, இனி ஒரு புதிய முயற்சி என்றால் எப்படி இருக்க வேண்டும் என அறிந்து கொள்ள எனக்கு ஆவல்.

அதற்காகத்தான் Survey Monkey தளம் மூலம் ஆய்வை மேற்கொண்டேன். அந்தத் தளம் 100 பேர் வரை பதில்கள் திரட்டும் சேவையை இலவசமாக அளிக்கிறது. நான் 30ம் தேதி சனிக்கிழமை காலை 12.06க்கு சர்வேயை என் வலைப்பதிவில் இட்டேன். நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.

30ம் தேதி 12 மணி 19 நிமிடம் 38ம் நொடிக்கு முதல் பதில் வந்தது. நண்பர் லக்கி லுக் படிவத்தை முதலில் நிரப்பி அனுப்பி இருந்தார். திங்கட் கிழ்மை அதிகாலை 4 மணி 7 நிமிடங்கள் 59 நொடிக்குள் 100 பேர் பதிலளித்து விட்டனர்.

பதிலளித்த அனைவருக்கும் நன்றி. இந்த சர்வே பற்றி தமயந்தி, பாஸ்டன் பாலா, மதுமிதா, இட்லிவடை ஆகியோர் தங்கள் வலைப்பதிவுகளில் தகவல் வெளியிடிருந்தனர். சிலர் மடலாடற் குழுமங்களிலும் தெரிவித்திருந்தனர். அவர்களுக்கும் நன்றி.
இட்லி வடை வலைப் பூவில் பதிலளிக்கச் சென்ற சிலர் சர்வே முடிந்துவிட்ட்து என செய்தி வருகிறது எனக் குறிப்பிட்டிருந்தார்கள். 100 பதில்கள் வந்து விட்டதால் இணையதளம் மேற்கொண்டு அனுமதிக்க மறுக்கிறது. சர்வேயை மீண்டும் புதிதாக இட்டு இருக்கிறேன். பதில்களை எதிர்நோக்கியுள்ளேன். புதிய் சுட்டி:http://www.surveymonkey.com/s.aspx?sm=xwg9rVOVbQHHZUc2kxEh1A_3d_3d
பதிலளிக்க விருப்பமுள்ளவர்கள் பதிலளிக்கலாம்

இந்த சர்வே கொடுத்திருக்கும் பதில்களை பகுத்தாய்ந்து கொண்டிருக்கிறேன். விரைவில் அவற்றில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்

அனைவருக்கும் நன்றி